உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவரமாக
பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்த சூழலில் சுமார் 56 மில்லி மீட்டர் மழை பெய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கனமழை காரணமாக உசிலம்பட்டி அருகே
மாதரை கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அப்பகுதி வழியாக மதுரை மற்றும் தேனி, கேரளா வரை செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அகற்றினர்.
இறுதியாக நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், விளாங்குடி, அழகர்கோவில், மேலூர், திருமங்கலம், பூவந்தி, வரிச்சூர், கள்ளிக்குடி,பேரையூர், செக்கானூரணி, மேலக்கால்,தேனூர், துவரிமான், நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மதுரை நகரில், விடிய, விடிய பலத்த மழை பெய்தால், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோயில் தெருவில், மழைநீர் குளம் போல சுற்றி வளைத்து நீர் வீட்டு வாசலில் நின்றது.
மருதுபாண்டியர் தெரு, ஆறாவது மெயின் ரோடு, சௌபாக்ய கோயில் தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து, சாலையில் கழிவு நீர் ஒடின.
மதுரை யாகப்ப நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தேங்கியுள்ள நீரில் இரண்டு வாகனத்தில் சென்ற இருவர் தவறி விழுந்தனர்.
மதுரை மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் கூடுதல் டிஜிபி டேவிட்சன் பரிசுகள் வழங்கி பாராட்டு.
மதுரையில் நேற்றிரவு மூன்று மணி நேரத்திற்கு பெய்த கன மழையால் மணிநகரம் ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் சிக்கி மூழ்கி கொண்டிருந்த காரில் சிக்கிய மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கோபி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை துரிதமாக செயல்பட்ட காவலர் தங்கமுத்து மற்றும் மணிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஆள் உயர தண்ணீரில் இறங்கி
மீட்டனர். இதனைத் தொடர்ந்து, காவலர் தங்கமுத்து, மனிநகரத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் சந்திர சேகரின் நற்செயலை பாராட்டி தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் பரிசுகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.