
சரவெடி தடையை நீக்க சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யப்படும் என சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களிடையே கலந்துரையாடிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை தொழிலாளர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார்.
முன்னதாக அவரை ஆரத்தி எடுத்து பட்டாசு தொழிலாளர்கள் வரவேற்றனர். கலந்துரையாடலின் போது,பெண் பட்டாசு தொழிலாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி,கிராமப்புற ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி வீடுகளும்,வரும் 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி வீடுகளும் கட்டிக்கொடுக்க உத்திரவிட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக வீட்டின் பட்டா தாய்மார்கள் பெயரில் இருக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளார் என்றார்.
தாய்மார்கள் தன்னிரைவோடு இருக்க வேண்டும்சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறார் என்றும் பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து தான் பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டதோடு,பெண்களுக்கு வீட்டுக்கு வீடு ஜல்ஜீவன் திட்டம், இலவச கேஸ் சிலிண்டர்,தனிநபர் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் 5 கிலோ அரிசி,1 கிலோ பருப்பும் ரேஷன் கடை மூலமாக தருகிறார் என்றார்.
பட்டாசு தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்களுக்கு ஈ.எஸ். ஐ கார்டு மற்றும் மருத்துவ வசதியுடன் பென்ஷன் வசதியும் பிரதமர் செய்து கொடுத்துள்ளார் என்றார்.
தீபாவளி சீசன் நேரம் இது உங்களை பார்த்து வாழ்த்துவிட்டு,பிரதமரின் பல திட்டங்களை தங்களிடத்தில் சொல்ல வந்தேன். தங்களை சந்தித்தது மகிழ்ச்சி என்றார்.
இந்த கலந்துரையாடலின் போது பட்டாசு தொழிலில் சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் தங்களுக்கு அந்த தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது என தொழிலாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு தொழிலாளர்கள் பக்கம் இருந்து இதை சட்டப்படி தீர்வு காண வழிவகை செய்யும் என உறுதியளிந்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வின் முடிவில் மத்திய அமைச்சருடன் பட்டாசு தொழிலாளர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.