மதுரை வாடிப்பட்டியில் ஆதி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் காளை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில், வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. .
இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு கருதி காவல் துறையினர் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு கொடுத்து வந்த அனுமதியை ரத்து செய்தனர். இதனால் , காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஆகியோர் தங்களின் காளைகளை அவிழ்க்க முடியாமல், கவலையில் இருந்தனர் .
இந்த ஆண்டாவது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் என்ற ஆவலில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட காளைகளுடன், அதன் உரிமையாளர்கள் வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலுக்கு காளைகளை கொண்டு வந்தனர் . ஆனால் , வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும் மந்தை திடலில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டிருந்த நிலையில், காளை உரிமையாளர்களும் மாடுபுடி வீரர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர் .
அங்கிருந்த காளை உரிமையாளர் கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை முறையாக அனுமதி பெற்று பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்று வந்தது. ஒரு சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நிறுத்தப் பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் போட்டியை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும் அதற்காக அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து அடுத்த ஆண்டாவது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.