செம்மொழி எக்ஸ்பிரஸ்ஸில் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரிடம் அத்துமீற முயன்ற இளைஞர் மீது தீவிர விசாரணை – கரூர் ரயில்வே போலீஸார் தீவிரம்!
அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக இருப்பவர் ராமநாதன், இவர், தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ்ஸில் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.
அவர், குளிர்சாதன பெட்டி முதல் வகுப்பில் கரூர் வழியாக வந்து கொண்டிருந்த நிலையில், ஓர் இளைஞர் சந்தேகத்திற்கிடமான நிலையில்,தூங்கிக் கொண்டிருந்தவரைத் தட்டி எழுப்பியுள்ளார். கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதோடு, தண்ணீர் பாட்டில் வேண்டுமா? என்றும் கேட்டுள்ளார்.
அந்த நபர் ரயில்வே கேண்டீனில் தற்காலிகமாக பணியாற்றுவதாகக் கூறியதாகவும், அவரிடம் அடையாள அட்டை ஏதும் இல்லை எனும் நிலையில், இஸ்லாமிய இளைஞர் என்று தெரியவந்த நிலையில், தாம் சந்தேகம் கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார் ராமநாதன்.
ஏற்கெனவே கடந்த 12 ம் தேதி, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரை, அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான தாம் சந்தித்து, தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளதாகவும், அவர்களை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை கொடுத்து அதை, தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாகவும் தெரிவித்த ராமநாதன், இந்தச் சூழ்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், தமது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, கரூர் ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதில், அந்த இளைஞர் கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியைச் சார்ந்த இப்ராஹிம் என்று தெரியவந்துள்ளது.