வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறாது, எனினும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது. கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 30ம் தேதி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்திருந்தது. இதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இநத நிலையில், இந்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. புயல் உருவாக வாய்ப்பு இல்லை என்றாலும், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
கடலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதேபோல், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.