
சென்னையில் நேற்று வந்திறங்கிய அமித் ஷா, மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பினார். தமிழகத்தில் அடுத்தது தேஜ., கூட்டணி ஆட்சிதான் என்று, எடப்பாடி முன்னிலையில் உறுதியாகத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா பேச்சு!
சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது…
அதிமுக., பாஜக., இணைந்து ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டணி செயல்படும். கூட்டணிக்கு அதிமுக., எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது இயல்பான இயற்கையான கூட்டணி. அதிமுக.,வின் தனிப்பட்ட பிரச்னைகளில் நாங்கள் தலையிடப் போவதில்லை.
தேர்தல் விஷயங்கள் குறித்து எடப்பாடி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம். கூட்டணி அமைவது, இருவருக்கும் பலனளிக்கக் கூடியது. யார் யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்தும், ஆட்சியில் யார் பங்கு பெறுகிறார்கள் என்பது குறித்தும் பிறகு முடிவு செய்வோம்.
ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மும்மொழி, தொகுதி மறுவரையறை, சனாதன பிரச்னைகளை திமுக., எழுப்புகிறது. வரும் தேர்தலில், திமுக.,வின் மோசடி, ஊழல், சட்டம் ஒழுங்கு, தலித்கள் மீதான தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பேசுபொருளாக இருக்கும்.
டாஸ்மாக்கில் ரூ.39,775 கோடி அளவு மோசடி நடந்துள்ளது. மணல் கொள்ளை மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடக்கிறது. மின்சாரம், நிலக்கரியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடியும், எல்காட் நிறுவனத்தில் அரசு பங்கு விற்பனை மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாயும், பண மோசடி மூலம் ஆயிரம் கோடிக்கு மேலும் தமிழகத்தில் ஊழல் நடக்கிறது.
ஊட்டச்சத்துக்கு சாதனம் வாங்குவதில் ரூ.450 கோடி, செம்மண் கடத்தல், அரசு வேலைக்கு பணம், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் என பல மோசடி நடக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும்.
மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை பிரச்னைகளை திமுக.,, பயன்படுத்துகிறது. நீட் உள்ளிட்ட விவகாரத்தில் அதிமுக.,, உடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது செயல்திட்டம் உருவாக்கப்படும்.
தமிழக மக்களை சந்திக்கும்போது, அவர்கள் உண்மையாக சந்திக்கும் பிரச்னையை எடுத்து செல்வோம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்துவோம். திமுக.,,வை போன்று மடைமாற்றும் திட்டத்தில் ஈடுபட மாட்டோம். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம்.
எடப்பாடி பழனிசாமிதலைமையில் தான் கூட்டணி செயல்படும். தமிழ் மக்களையும், மாநிலத்தையும் கவுரவமாகவே கருதுகிறோம். தமிழகத்தை எப்போதும் பிரச்னைக்கு உரியதாக கருதியது இல்லை. மோடி, தமிழகம், தமிழ் கலாசாரத்தை மதித்து பார்லிமென்டில் செங்கோலை நிறுவினார். ஆனால், அதனை திமுக.,, எதிர்த்தது. மோடி தான் தமிழின் பெருமையை போற்ற காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தை நடத்தினார்.
தமிழகத்தில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை கேலோ விளையாட்டில் இணைத்தார். தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரே நிறுவனம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம். மத்திய அரசின் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பிரதமர்,
ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. திருக்குறளை உலகின் பல்வேறு நாட்டின் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறோம். இதுவரை 63 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம். பாரதியின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டவர் பிரதமர். சிவில் சர்வீஸ் தேர்வுகள் தமிழில் எழுத முடிகிறது. ஆனால், மத்தியில் திமுக.,, கூட்டணி ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய ஆயுத காவல்படை தேர்விலும் இந்த நிலை இருந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுத முடிகிறது. திமுக.,, கூட்டணி ஆட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடிந்தது.
எங்கு எல்லாம் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்கள் படிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம், இந்த படிப்புக்கான தமிழ்ப் பாடங்களை உருவாக்க வேண்டும் என கூறியும், அது நடக்கவில்லை.
திமுக.,, இதுவரை தமிழ் தமிழ் என சொல்கிறார்கள். ஆனால், தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என மக்களிடம் பட்டியலிட முடியுமா? கூட்டணி குறித்து அதிமுக.,, எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.
நீண்ட வலுவான உறுதியான கூட்டணி அமைப்பதற்காக தான் கூட்டணி அமைப்பது காலதாமதமானது.தமிழக மக்கள் ஏதும் அறியாதவர்களா? காங்கிரசின் நிலைப்பாடு என்ன எதை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள் என்பதை அறிந்தவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள்…. என்று கூறினார் அமித் ஷா.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழன் அன்று இரவு தமிழகம் வந்தார். இந்த பயணத்தின் போது, தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக.,, மாநில தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்பட்டது.
முதலில் முன்னாள் புதுவை ஆளுநரும் பாஜக., முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் கூற, தமிழிசையின் வீட்டுக்குச் சென்றார். பின், துக்ளக் இதழாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக.,, மாநிலத் தலைவர் குறித்து பேசப்பட்டதாம். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக கட்சிகளை சேர்ப்பது குறித்தும் பேசப்பட்டதாம். இந்த ஆலோசனையின் போது, அண்ணாமலை மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, திமுக.,வின் செயல்பாடு எப்படி இருக்கும், அதை எப்படி சமாளிப்பது, கூட்டணியில் எவரை இணைக்கலாம், மாநிலத் தலைவராக யார் இருந்தால் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்பது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளிக் கிழமை மாலை 2 மணிக்குத் தொடங்கி, மதியம் 4 மணிக்குள் மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் எனு தெரிவிக்கப்பட்டது. எனினும் பாஜக., சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே போட்டியிட மனு அளித்தார். இதனால் அவர் போட்டியின்றி மாநிலத் தலைவராகத் தேர்வாவது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமித் ஷா இது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக பாஜக.,, தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக பாஜக.,, தலைவராக பாராட்டத்தக்க வகையில், பல சாதனைகளை அண்ணாமலை செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாகட்டும், கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாகட்டும், அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது. அண்ணாமலையின் திறன்களை தேசிய அளவில் பாஜக.,, பயன்படுத்திக் கொள்ளும்… என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமித் ஷா, அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு பெரும் கவனம் பெற்றது. அதில் அமித் ஷா கூறிய கருத்துகள் இவை…
பாஜக., தலைவர்களும், அதிமுக.,, தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். அடுத்து வரும் தேர்தலை தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம். இந்தத் தேர்தலை தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம்.
1998 ம் ஆண்டு முதல் பாஜக.,வும் அதிமுக.,,வும் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. இது இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலம் முதல் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 30 இடங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.
வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல். டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும்.
ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப திமுக மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். தமிழ் மக்களை, தமிழகத்தை, தமிழ்மொழியை நாங்கள் கௌரவமாகக் கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம்.
தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா? பாஜக ஆளும் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழியில் படிக்கிறார்கள்.
தமிழில் பாடநூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பாஜக, அதிமுக ஒன்றாக இணைந்து கூட்டணி; தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் இபிஎஸ் தலைமையிலும் கூட்டணி என்பதை செய்தியாளர் சந்திப்பில் கூறினார் அமித் ஷா.
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்.
திமுக., என்ன செய்யும்?
அடுத்து அமைவது கூட்டணி அரசுதான் என்று அமித் ஷா கூறிய நிலையில், ஏற்கெனவே திமுக.,வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்னெடுத்து பல நேரங்களில் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. கூட்டணியாகப் போட்டியிட்டு, பெருவாரியான வாக்குகள் பெற்றும், தனிக் கட்சியாக திமுக., ஆட்சி அமைத்து, பெரும் ஊழலில் ஈடுபடுவதும், ஒட்டுமொத்தமாக ஆட்சியின் மூலம் கொள்ளையடிப்பதும் கூட்டணி ஆட்சியில் என்றால் அது கட்டுப்படுத்தப் படும் என்ற கருத்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த தேர்தலில் இதுபோன்ற ஆட்சியில் பங்கு என்பதற்கு திமுக., சம்மதம் தெரிவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.