
ஐ.பி.எல் 2025 – சென்னை vs கொல்கொத்தா
எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை – 11.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (103/9, ஷிவம் துபே 331, விஜய் ஷங்கர் 29, ராகுல் திரிபாதி 16, டேவன் கான்வே 12, சுனில் நரேன் 3/13, வருண் 2/22, ஹர்ஷித் ராணா 2/16, வைபவ் அரோரா, மொயின் அலி தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (10.1 ஓவர்களில் 107/2, க்விண்டன் டி காக் 23, சுனில் நரேன் 44, அஜிங்க்யா ரஹானே ஆட்டமிழக்காமல் 20, ரிங்கு சிங் 15, அனுஷ் காம்போஜ் 1/19, நூர் அகமது 1/8) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் இன்று மிக மோசமாக பேட்டிங் செய்தனர். இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நால்வர் மட்டுமே. டேவன் கான்வே (11 பந்துகளில் 12 ரன்), ராகுல் திரிபாதி (22 பந்துகளில் 16 ரன்), விஜய் ஷங்கர் (21 பந்துகளில் 29 ரன்), ஷிவம் துபே (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்) ஆகியோர் மட்டுமே.
மற்ற வீரர்களான ரச்சின் ரவீந்திரா (4 ரன்), அஷ்வின் (1 ரன்), ஜதேஜா (பூஜ்யம் ரன்), தீபக் ஹூடா (பூஜ்யம் ரன்), எம்.எஸ். தோனி (1 ரன்), நூர் அகமது (1 ரன்), அன்ஷுல் காம்போஜ் (3 ரன்) ஆகியொர் கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்கி திக்கித் திணறினார்கள்.
கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் 3 விக்கட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். மூவரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி, 51 ரன்கள் கொடுத்து 7 விக்கட்டுகள் வீழ்த்தினார்கள். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 103 ரன்கள் எடுத்தது.
104 ரன் கள் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக மட்டையாட வந்த கொல்கொத்தா அணி 10.1 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 107 ரன் எடுத்து எளிதாக வெற்றிபெற்றது.
அந்த அணியின் க்விண்டன் டி காக் (16 பந்துகளில் 23 ரன், 3 சிக்சர்), சுனில் நரேன் (18 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அஜிங்க்யா ரஹானே (17 பந்துகளில் 20 ரன், 1 ஃபொர், 1 சிக்சர்), ரிங்கு சிங் (12 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) என மட்டையாட வந்த அனைத்து பேட்டர்களும் மிக நன்றாக ஆடினர். இதனால் கொல்கொத்தா அணி 59 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.