
தாம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் எல்லாவற்றிலும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு விலை உயர்வையும் கட்டண உயர்வையும் செய்துவிட்டு, ரயிலில் தொலைதூர கட்டணங்களில் மிகச் சிறிதளவு கட்டண உயர்வு என்று வரும் தகவலை எதிர்த்து ரயிலில் போய் நாடகமாடுவது ஏன் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!” – என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தனது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…
சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார். ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை. தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.
பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண். – என்று பதிலடி தரும் வகையில் குறிப்பிட்டிருக்கிறார்.





