
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலின் ஆனிப்பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருதேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த ஜூன் 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 7ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் (6ம் தேதி) காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இதைத் தொடர்ந்து காலையில் பல்லக்கில் சுவாமி, அம்பாள் (தவழ்ந்த கோலத்தில்) வீதி உலா நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், நடராஜபெருமான் சிவப்பு சாத்தியும் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உட்பிரகாரம் வலம் வருதல் நடந்தது.
தொடர்ந்து 8ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை (7ம் தேதி) காலையில் சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலா வருதலும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்கடாட்சம் வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளிவாகனத்திலும் வீதி உலா நடந்தது. ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று (8ம் தேதி) நடந்தது. இதில் அதிகாலையில் சண்டிகேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் பக்தர்கள் மூலம் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேரில் எழுந்தருளல் நடந்தது. இதைத் தொடர்ந்து சரியாக காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
தேரை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆணி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சிந்தாமணி நாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் மூலஸ்தானத்தில் சிவன் பார்வதி சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகின்றனர் மூலஸ்தானத்தில் காட்சி தரும் ஒரே கோவில் இதுதான் என கூறப்படுகிறது .
இக்கோவில் தேரோட்டத்தை ஒட்டி திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பின்பு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர் .திருத்தோரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் .

இதுபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் சுவாமி கோவிலில் இன்று ஆணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது இக்கோவிலில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றி தினசரி பல்வேறு நிகழ்வுகளுடன் திருவிழா நிகழ்வுகளும் சுவாமி வீதி உலாவும் விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தினர்





