
கல்வி வளர்ச்சி நாள்
மதுரை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் 800-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் அனுசரித்து வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
இவ்விழாவில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா ஸ்போர்ட்ஸ் அகடமி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடனர். இதில் சுருள்வாள் பிரிவில் 7 முதலாம் பரிசும். ஒற்றை கம்பு 8 முதலாம் பரிசும், நான்கு 2 பரிசும் 2 மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பரிசுகளை உலக சிலம்பம் விளையாட்டுச் சங்க தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். சுதாகரன், , விருதுநகர் மேயர் சங்கீதா இன்பமும் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த சாதனை மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசான் கே கணேசன் ஆகியோரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
அலங்காநல்லூரில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம், 11ஆம், 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முக்குலத்தோர் நல சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் சோணைமுத்து, செயலாளர் ஆதி முத்துக்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்குலத்தோர் நல சங்கத்
தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வரவேற்றார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் சௌத்ரிதேவர், வல்லப்பா கல்வி
குழும நிறுவனர் வல்லப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில், பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.





