
சென்னை:
ஜெயலலிதாவை மருத்துவமனைக்குg கொண்டு செல்வதற்கு 2 நாள்களுக்கு முன்பே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது, சருமப் பிரச்னைக்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்று டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான டாக்டர் சிவக்குமார் இன்று இரண்டாவது முறையாக ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்பு நடந்தவற்றையும், செப்டம்பர் 26ம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிவக்குமார் தெரிவித்ததாகக் கூறப்படுபவை… ஜெயலலிதா, வீட்டில் திடீரென மயக்கம் அடைந்ததால் அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது நானும் உடன் இருந்தேன் என்று சிவக்குமார் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படும் இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு சருமம் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும், ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



