
தொடர்ந்து நீதிமன்றத்தில் குட்டுவாங்கும் திராவிட மாடல் திமுக அரசு…
கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான கந்தகோட்டம் கோவிலின் நிதியிலிருந்து வணிக வளாகம் கட்டுவதற்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக முழுவதும் எந்த கோவில் நிதியிலிருந்தும் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்று உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இந்து முன்னணி வரவேற்கிறது.
அதே சமயத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்று தீர்ப்பளிப்பது இது முதல் முறை அல்ல, திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலாக கோயிலை கபளிகரம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் தடை விதித்து நாள்தோறும் இது போன்ற தீர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக அசட்டையாக மீண்டும் மீண்டும் கோயில் நிதியை கபளிகரம் செய்யும் முயற்சியை இந்து சமய அறநிலையத்துறையும் தமிழக அரசும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது வாடிக்கையாக உள்ளது இவ்வாறான செயல் கடும் கண்டனத்துகுரியது.
திருக்கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும், பக்தர்கள் அன்றாடம் செலுத்தும் காணிக்கைகளையும் திருக்கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், வணிக வளாகம், பள்ளி கல்லூரிகள் அமைப்பது என்ற போர்வையில் கோயில் நிதியை அபகரிக்கும் முறையற்ற செயலை தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிதியிலிருந்து வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்ற சுற்றறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசினை வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் பக்தர்களை திரட்டி தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் முறையற்ற செயலை தடுக்க இந்து முன்னணி போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.





