
தென்காசி அருகே இடைக்கால் துரைசாமிபுரம் பகுதியில் திங்கட்கிழமை இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததனர்.சிறுவர்கள் உட்பட பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள அரசுமருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் காவல்துறையினர் மற்றும் மீட்புப்படை வீரர்கள் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பஸ்களின் முன்பகுதி பெரிதும் சேதமடைந்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றதில் தென்காசி நோக்கி சென்ற தனியார் பஸ் மற்றும் தென்காசியில் இருந்து கோவில்பட்டி சென்ற தனியார் பஸ்கள் எதிர் எதிரே வேகமாக வந்து மோதியதில் இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் துரைச்சாமிபுரம் அருகேதனியார் பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராக மோதி பயங்கர கோரவிபத்து ஏற்படுத்தியுள்ளது என இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்தின்போது, வாகனத்துக்குக் கீழே மூன்று பயணிகள் சிக்கியிருந்ததாகவும் அவர்களை பொதுமக்கள் மீட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துகள் நேரிடுவதாகவும், இன்று நேர்ந்த விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.
தென்காசி – மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் செல்லக் கூடிய தனியார் பேருந்துகள் போட்டிப் போட்டுக் கொண்டு செல்வதாகவும், அதன் காரணமாக அதிவேகமாக இயக்கப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
விபத்து நடந்த பகுதி, இரண்டு பேருந்துகள் செல்லும் வகையில் விரிவாகவே உள்ளது. வெள்ளைக் கோட்டுக்கு பிறகும் இட வசதியும், ஒரு பக்கம் மக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் பேருந்துகள் வேகமாக இயக்கப்பட்டிருப்பதும், போட்டிப் போட்டுக் கொண்டு செல்ல முயன்றிருக்கலாம். இதுவே இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தென்காசி மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களைக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்காசி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





