

தென்காசி அருகே திங்கட்கிழமை காலை நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6பேர் பலியான நிலையில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது .76 பேர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது என தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டம், திருமலைக்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இதேபோல், தென்காசியில் இருந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் கிராமத்தில் இந்த 2 பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் 2 பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. பேருந்துகளில் பயணித்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்துகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், அந்த வழியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். விபத்து குறித்து இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது என தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.





