
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு ‘ முன்பு நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில், அறநிலை துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அந்த மனு உடனடி விசாரணைக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை அல்லது மறு உத்தரவுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மிகவும் பதட்டமான சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதி உள்ளதால், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை பாதை பகுதிகளில் ஆய்வு செய்தார் .
அதனைத் தொடர்ந்து, தீபத் திருநாளான இன்று ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை சார்பில் 27 இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் ஆர்ச், 16 கல் மண்டபம் மற்றும் பெரிய ரதவீதி மேலரத வீதி கீழ ரத வீதி திருப்பரங்குன்றம் கோவில் செல்லும் வழித்தடம், பழனி ஆண்டவர் கோவில், தர்கா பகுதி மற்றும் கோவில் பின்புறம் உள்ள படிக்கட்டு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கண்காணிப்பு வசதிக்காக கோவில் வளாகம் கிரிவலப் பாதை பெரியதவிதி கீழ ரதவீதி மேலரத வீதி பதினாறுகள் மண்டபம் பழனி ஆண்டவர் கோவில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.





