
“த.வெ.க. அரசு அமைந்தபிறகு நூல்கள் வாங்கப்படவில்லை”-நூலகத் துறை
- இன்று வெளியாகியள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் சென்னைப் பதிப்பின் 10ஆம் பக்கத்தில் இந்தத் தலைபின் கீழ் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (இணைப்பில் படம்)
அது ” Sources in the library department said there was no procurement of books for any library after TVK came to power” என்று தெரிவிக்கிறது. (“TVK ஆட்சிக்கு வந்த பிறகு எந்த நூலகத்திற்கும் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை என்று நூலகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன’}
அப்படியானால் இப்போது பெரியார் அறிவுலகில் காணப்பட்ட போலி நூல்கள் எந்த ஆட்சியில் வாங்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். முந்தைய திமுக அரசு.
“”தேர்வு மற்றும் பரிந்துரை குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நூல்கள் வாங்கப்பட்டன. தேர்வுக் குழுவில் முன்னாள் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜே.ஜெயரஞ்சன், விலங்கியல் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், தமிழறிஞர் எம்.கே.அரசேந்திரன், தொல்லியல் ஆய்வாளர் கே.ராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்ததாக நூலக்த் துறை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.ஜெயந்தி கூறுகிறார்” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
பேராசிரியர் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்ட முறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். குழுவில் உள்ள மற்ற எவரும் இதுவரை வாய் திறக்கவில்லை.
2. நேற்று புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன், ” பெரியார் உலகத்தில் (sic) நடந்திருப்பது மிகப் பெரிய வருத்தத்திற்குரியது. ஆனால் அங்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நூலகத்திலும் நடந்திருக்கிறது.இதை நான் மீண்டும் கவனப்படுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு ஒவ்வொரு நூலகத்திலும் இது போன்ற போலி நூல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன” என்று கூறினார்.
இது இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகின்றன. 1. ஒவ்வொரு நூலகத்திலும் இருக்கின்றன என்றால் அவை இப்போது அல்ல, முன்னரே வாங்கப்பட்டிருக்கின்றன. அதாவது முந்தைய திமுக ஆட்சிக்காலத்திலேயே வாங்கப்பட்டிருக்கின்றன. 2. இது நெடுங்காலமாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் பகல் கொள்ளை.
இந்த இரு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும் போது தெரியவருவது என்ன?
- போலி நூல்கள் த.வெ.க. அரசில் வாங்கப்படவில்லை
2.எல்லா நூலகங்களிலும் ஆயிரக்கணக்கில் போலி நூல்கள் இருக்கின்றன. அவை முந்தைய ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டிருக்கின்றன.
ஆச்சரியம் என்னவெனில் அவற்றை தேர்வு செய்ய அறிஞர்கள் கொண்ட ஒரு குழு இருந்திருக்கிறது. அதன் தலைவர் திமுக ஆட்சிக்கு வரும் முன்னரும், வந்த பின்னும் திமுகவின் ஊதுகுழலாக தொலைக்காட்சிகளில் ஒலித்த திரு.ஜெயரஞ்சன் அவர்கள். அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்வு முறையை ஆட்சேபிக்கிறார்
குழுவில் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் நூல்கள் திமுக ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. அவை குழுவிற்குத் தெரிந்து வாங்கப்பட்டனவா? அல்லது குழுவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாங்கப் பட்டனவா? அல்லது குழுவின் ஒப்புதலோடு வாங்கப்பட்டனவா?
ஏன் உயர்நீதிமன்றமே sumotoவாக ஒரு விசாரணையை மேற்கொள்ளக் கூடாது?
வழக்கறிஞர்கள் ஏன் நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று விசாரணை கோரக் கூடாது?
இது அறிவுலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான தாக்குதல். வழக்கறிஞர்களும் அறிவுலகின் பிரஜைகள்தானே?
போலி நூல்கள் பெறப்படும் பொய்யறிவு இளைஞர்களின் எதிர்காலத்தையே பாழ்செய்யும் தாக்கம் கொண்டது. நீதிபதிகளுக்கு இளைஞர்கள் நலனில் அக்கறை இல்லையா?
நீதிபதிகளின் காதுகளை எட்டும்வரை இதைப் பகிருங்கள்
- மாலன் (மூத்த பத்திரிகையாளர்)
இப்படியெல்லாம் கூட ஊழல் செய்ய முடியுமா என்று அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்தியாவுக்கே வழி காட்டும் ஊழல்.
பதிப்பகங்களும் நூலாசிரியர்களும் உண்மையில் இருந்தால் அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்பதால் கற்பனையிலேயே உருவாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட இரு பதிப்பகங்கள் மட்டும்தான் போலியா இன்னும் பல போலிகள் உள்ளனவா என்று இனிமேல்தான் தெரிய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட போலி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் A.I. ஆல் உருவாக்கப்பட்டன என்று தெரிகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் ஆசிரியர் A.I. என்று குறிப்பிட்டிருந்தால் கொஞ்சம் நேர்மையான ஊழலாக இருந்திருக்கும்.
பதிப்பகங்கள் தேர்வு, புத்தகங்கள் கொள்முதல், பரிந்துரைக்குழு நியமனம் எல்லாம் சென்ற ஆட்சியிலேயே நடந்து முடிந்துள்ளது.
நூலகத்தைத் திறந்து வைத்ததும், பெறப்பட்ட நூல்களில் சீல் வைத்ததும் மட்டுமே இந்த ஆட்சியில் நடந்திருக்கிறது.
நூலகத்தைத் திறந்து வைப்பதில் என்ன பெருமை என்று முன்னாள் முதல்வர் கேட்டார். ஊழல் செய்வதுதான் பெருமை போலிருக்கிறது.
பரிந்துரைக் குழுவில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு ஊழல் விவரம் தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஒரு கௌரவத்திற்காக குழுவில் இடம் பெற சம்மதித்திருக்கலாம்.
ஆனால், ‘ ஒரே பதிப்பகத்திடமிருந்து இத்தனை புத்தகங்கள் வாங்குவதா? ஏன் இப்பதிப்பகங்களுக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்? ‘ என்று அவர்கள் கேட்டிருக்க வேண்டும்.எதற்கு வம்பு என்று சும்மா இருந்து விட்டார்களோ என்னவோ!
ஆனால், பெருமாள் முருகன் அவர்களுக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கலாம். அதனால்தான் முதல் வேலையாக நூலகம் சென்று ஊழலை வெளிப் படுத்தியுள்ளார். பாராட்டுக்குரிய செயல். தமிழக அரசின் விருதுக்கு தகுதியானவர்.
இலக்கியத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஊழல் ஆசாமிதான் இப்புத்தகங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.
நாலடியார் என்று ஒரு நபர் இருந்தார் என்பது அவரது கற்பனை. நல்ல வேளை, இவர்தான் நாலடியார் என்று ஃபோட்டோ எதையும் போடவில்லை.
பாரதியார் ஒரு சினிமா வசனகர்த்தா என்று குறிப்பிடவில்லை. மற்ற எல்லா கோமாளித்தனங்களும் அவரது கற்பனையில் உதித்துள்ளன. பொய்களுக்கும் உளறல்களுக்கும் குறைவில்லாத நூல்கள்.
ஊழல் நரகாசுரனை வதம் செய்ய கடவுள் அவதாரம் செய்யும் வரை விமோசனம் இல்லை. அது வரை காத்திருப்போம்.
- துக்ளக் சத்யா


