ஜெய்ஹிந்த் செண்பகராமன் குறித்த மறைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரி ஒரு மனுவை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் வழங்கியுள்ளார் பாஜக., வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன்.
இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, ஜெய்ஹிந்த் செண்பகராமன் முதல் உலகப் போர் காலகட்டத்தில் மிகவும் தீவிரமான முறையில் வெள்ளைக்கார அரசாங்கத்தை எதிர்த்து போராடிய ஒரு சுதந்திர போராட்ட தியாகி. எம்டன் கப்பலை கொண்டு அவர் வெள்ளைக்கார அரசாங்கத்தை தாக்கி கதிகலங்க செய்தார் என்பது வரலாறு.
ஜெர்மனியில் ஹிட்லர் பதவி ஏற்பதற்கு முன்பு “இந்தியர்கள் தன்னைத்தானே ஆண்டு கொள்வதற்கு தகுதியற்றவர்கள்” என்று கூறியதற்கு கடுமையான முறையில் ஆட்சேபனை செய்து ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாபெரும் தமிழன் இவர்.
இந்திராகாந்தி காலத்தில், இவரது மனைவியின் மறைவிற்குப் பின்பு இவரது ஆவணங்கள் 17 பெட்டிகள் நிறைய இந்திய அரசாங்கத்தின் ஆவணக்காப்பகத்தில்- ARCHIVES ல் வைக்கப்பட்டது.
ஹிட்லர் வழங்கிய மன்னிப்பு கடிதம் உட்பட பல ஆவணங்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் வெளியிடப்படுகிற பட்சத்தில் அந்த மாபெரும் மகாத்மாவின் பெருமைகள் வெளிப்படும். நமது இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாற்றின் மீதான பார்வையை மாற்றி விடக்கூடிய அளவில் இது அமையும்.
-அ.அஸ்வத்தாமன்,
பாஜக