write thoughts - 2026

ஊழல் மலையில் ஒரு பாறைதான்! இதையும் சகித்துக் கொள்ள வேண்டுமோ?!

உரத்த சிந்தனை கேள்வி பதில்
write thoughts - 2026
#image_title

ஆக, அடுத்த பிரச்னைக்கு எல்லாரும் தாவியாகிவிட்டது. அடைமழையாக வெளுத்துவாங்கும்;
அத்தனை குப்பை கூளங்களையும் அடித்துக் கொண்டு செல்லும் என்று நம்பிய இந்த மேகமும் கடந்து போயிற்று.

ஆரம்பித்தபோதே அது அப்படியான மலட்டு மேகமாகத்தான் இருந்தது. சுய இலக்குகளுடன் சாலையில் குறுக்கும் மறுக்குமாக ஓடும் வாகனங்கள் உமிழும் கரும்புகை மண்டலங்கள் எல்லாம் கார் மேகக் கூட்டங்கள் அல்ல.

ஈ.வெ.ரா. நூலக ஊழல்கள் என்பவை ஒட்டுமொத்த நூலக ஊழல்களைப் பொறுத்தவரையில் மூழ்கிக் கிடக்கும் பனி மலையின் சிறு நுனியென்றால், இந்த நூலக ஊழல் என்பது ஒட்டு மொத்த திராவிட மாடல் அரசின் ஊழல்களைப் பொறுத்தவரையில் ஒரு மாபெரும் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் ஒரு கோடி பனி மலைகளில் ஓரமாக இருக்கும் ஒன்று மட்டுமே.

ஓர் அரசுப் பள்ளிக்கு யாரேனும் இன்றே புறப்பட்டுப் போனால் இதுபோல் நூறு மடங்கு ஊழல் அங்கு நடப்பதை அம்பலப்படுத்தமுடியும். ஓர் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் ஓராயிரம் சோகக் கதைகள், ஊழல்கள் என கண்டு சொல்லமுடியும்.

ஓர் ஆலயத்துக்குச் சென்றால் கண்ணில் ரத்தம் வரும் அளவுக்கான அநீதிகளைப் பட்டியலிடமுடியும். ஓர் ஊடக நிறுவனத்துக்குள் சென்று ஆய்வு செய்தால் கொத்தடிமைக் கூடாரமாக அது எப்படி நடக்கிறது என்பது புரியவரும்.

திரையுலகத் துணை நடிகைகளிடம் மட்டுமல்ல; ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கும் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்… அங்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து திராவிட மாஃபியா ஃபாசிஸம் வரை அத்தனையும் ஆதாரபூர்வமாகக் கிடைக்கும்.

நீட் தேர்வு கூடாது என்று திமுக நியமித்த நமக்கு நாமே கமிஷன் திட்டத்தின் தரவுகளை தட்டிப் பார்த்தாலே தெரியும் ஐம்பதாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களில் அரை சதவிகிதம் பேருக்குக் கூட மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற உண்மை தெரியவரும்.

பள்ளிக் கல்விக்கென்று அரசு செலவிடும் தொகையில் 60-70% முழுவதும் தொழிற்சங்க ஆசிரியர்களின் சம்பளத்துக்கு மட்டுமே போகிறது என்பதும் தெரியவரும். இது அதிகாரபூர்வ லஞ்சம். அதிகாரபூர்வ கையாடல். எந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கும் தன்னிடம் படித்த மாணவர்கள் முறைசாரா தொழிலில் மட்டுமே முடங்குவது தொடர்பாக எந்தவொரு பொறுப்போ அக்கறையோ கவலையோ கிடையாது.

அரசு மருத்துவமனைக்கு அரசியல் பிழைப்புவாதிகளில் ஒருவர் கூட ஒரு தலைவலி மாத்திரை வாங்கக் கூடச் செல்வதில்லை என்பதிலிருந்தே அதன் தரம் அற்புதமாகப் புரியும். மதச்சார்பற்ற நாத்திக அரசுக்கு இந்து ஆலயங்களை நிர்வகிக்க எந்த தார்மிக அருகதையும் கிடையாது. சட்ட பூர்வ அனுமதியும் கிடையாது.

செய்திகளைத் திரித்து வெளியிடத் தெரிந்தால் மட்டுமே ஊடகங்களில் பணிபுரியமுடியும்; ஊடகங்கள் இயங்க முடியும். போலி நூல் பற்றிப் பொங்கும் எவருமே நிஜத்தில் கிறிஸ்தவ காவல்துறை அதிகாரி செய்த லாக்கப் கொலையைக் காட்சிப்படுத்தும்போது வன்னியராகக் காட்சிப்படுத்தியதில் இருந்த வன்மத்தைக் கண்டித்ததில்லை. எதிர்ப்பு கிளம்பியதும் அந்த வன்மம் துளியும் குறையாமல் இந்துவாகக் காட்டி இழிவுபடுத்தியதை எதிர்க்கவில்லை.

நிஜவாழ்க்கையில் ஒரு நயா பைசா லஞ்சம் தரமாட்டேன் என்று போராடியவர் ஒரு பிராமணர்; லஞ்சம் கேட்டு விரட்டியது காங்கிரஸ் அரசும் அதிகாரவர்க்கமும். ஆனால் திரைப்படத்தில் அந்த நாயகர் பிராமண எதிர்ப்பாளராகவும் அவரை எதிர்ப்பவர் பிராமண வட இந்திய வலதுசாரி சார்புடையவர் போல் காட்டியதை யாரும் கேள்வி கேட்கவில்லை.

நிஜத்தில் தன் வாழ்நாளை அர்ப்பணித்து அநாதைப் பிணங்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை, இறுதிச் சடங்குகள் செய்தவர் ஓர் இந்து. ஆனால் திரைப்படத்தில் அவர் இஸ்லாமியராகக் காட்டப்படுகிறார். தவிக்க நேரும் குடும்பத்தலைவர் கொடூரமானவராக வேறென்ன இந்துவாகக் காட்டப்படுகிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல; இந்த உலகிலேயே மிகப் பெரிய சமூக சேவை அமைப்புகளை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். பரிவார். ஆனால், எந்தத் திரைப்படம் எடுத்தாலும் மதமாற்ற வியாபாரி தெரேசாவின் படம் சுவரில் இருக்குமே தவிர ஆர்.எஸ்.எஸைவிடுங்கள் அன்னை சாராதாவின் படம் கூட இருக்காது. ராமகிருஷ்ண மிஷன், விவேகானந்த மிஷன்கள் செய்வதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அதுவும் குறைந்தபட்ச சேவை எண்ணம் கூட இல்லாமல் மத அரசியலை அதி வன்மத்துடன் செய்யும் நபருக்கு அன்னை என்று பெயர்.

இத்தனைக்கும் அவளுடைய தாய் நாட்டில் கம்யூனிஸ ரெளடிகள் கிறிஸ்தவர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றார்கள். ஒரு நொடி கூட அங்கு சென்று ஜெபமாலையை உருட்ட மனம் வரவில்லை. இங்கு நம் மரபை அழிக்கவென்றே திட்டமிட்டுச் செயல்பட்டதற்கு பாரத ரத்னா பட்டம் வேறு.

பிரிட்டிஷார் வந்துதான் இந்துக்களுக்குக் கல்வி தந்தார்கள் என்ற போலிப் பெருங்கதையாடலை தனி ஒருவராக பிரிட்டிஷ் ஆவணங்கள் கொண்டே முறியடித்த ஸ்ரீ தரம்பாலுக்கு ஒரு அங்கீகாரமும் கிடையாது.

ஆன்மிகம், ஞானம், சமூகக் கட்டமைப்பு, பொருளாதாரம், வணிகம், அரசியல், அதிகாரம் என அனைத்திலும் ஓரங்கட்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ நேருவது இந்துக்கள் மட்டுமே. பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களே பெரும்பான்மையாக ஒடுக்கப்படுவதென்பது எவ்வளவு பெரிய அபத்தம். எவ்வளவு பெரிய அநீதி?

போலித்தனத்தை அம்பலப்படுத்துவதிலும் கடைந்தெடுத்த போலித்தனம் இருந்தால் அதை எதைக் கொண்டு அப்புறப்படுத்துவது?

இந்து தேசத்தையும் தர்மத்தையும் பழிப்பதே அறிவுஜீவித்தனம்; முன்னோர்களைப் பழிப்பதே முற்போக்கு; இந்து ஆன்மிகத்தை மட்டும் அவமதிப்பதே அறிவியல் பார்வை; இந்து நம்பிக்கைகளை மட்டும் இழிவுபடுத்துவதே பகுத்தறிவு; அதுவே சீர்திருத்தம், அதுவே கலைச் சுதந்தரம், அதுவே நடுநிலை என்ற எண்ணம் கொண்டவர்களே எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

இந்த தேசம் இவர்களால் அல்ல; இவர்களை மீறியே இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறது. இனியும் அப்படியேதான் போராடவேண்டுமா..?

ஆநிரைக் கூட்டம்
தனது பூர்விக பூமியிலும்
ஆற அமர மேயவும் அசைபோடவும்
பாதுகாப்பான புல்வெளி தேடி அலையவேண்டுமா..?

கிடக்க ஓர் நிம்மதியான கிடையின்றி இரவெல்லாம்
அரைத்தூக்கத்தில் தவிக்கவேண்டுமா?

சொரணையுடன் கொஞ்சம் திமிறினாலும்
மூக்கணாங்கயிறு அறுக்கும்.

சுய கெளரவத்துடன் கொஞ்சம் மடியை இறுக்கிக் கொண்டாலும்
கறந்து காய்த்த கரங்கள்
காம்பை இறுக்கிப் பிழியும்

காமதேனுக்கள் சுரக்கும் பாலெல்லாம்
கயவர்களால்தான் கறக்கப்படவேண்டுமா..?

கசாப்புக் கடைக்கு அனுப்பபடுவதிலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால்
கடைசி சொட்டு உதிரத்தையும் பாலாக்கித்தான் தீரவேண்டுமா?

சனாதனம் என்பதே சாபமாகிவிடுமா..?

அழியாமல் இருந்தால் போதுமா..?
அரைக்கணமேனும் அழாமல் வாழவேண்டாமா?

*B R Mahadevan

Posts by Mahadevan B.R.: