
திருநெல்வேலி: நீங்கள் தேடிக் கொண்டு வரவேண்டாம் நாங்களே வருகிறோம் எங்களைக் கைது செய்யுங்கள் என்று கூறி, நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.
ராமராஜ்ய ரத யாத்திரையில் 144 தடை உத்தரவை மீறி ஒன்று சேர்ந்து ரதத்துக்கு வரவேற்பு அளித்த இந்து அமைப்பினரை, நேற்று நள்ளிரவு வீடு வீடாகத் தேடிச் சென்று கைது செய்தனர் போலீஸார். இந்த நிலையில், எங்களை வீடு வீடாகத் தேடி வரவேண்டாம், நாங்களே வருகிறோம், எங்களைக் கைது செய்யுங்கள் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இந்நிலையில், கைது செய்த அனைவரும் வேனை வீட்டு இறங்க மாட்டோம்; எங்களை சிறையில் அடையுங்கள் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நெல்லையில் ராம ரத யாத்திரையில் கலவரம் செய்யும் நோக்கில் வந்த இரண்டு இஸ்லாமிய இயக்கத்தினர்களை இந்து அமைப்பினர், காவல்துறையில் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அவர்களை அப்படியே அனுப்பி வைத்துள்ளனர் காவல் துறையினர். இதை அடுத்து, அதனைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப் பட்டது.
இதனிடையே, பா.ஜ.க பெண் பொறுப்பாளர் ஒருவரிடம் டவுண் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அநாகரிகமாகப் பேசினார் என்று கூறி இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரத யாத்திரையில் கலந்து கொண்ட இந்து அமைப்பினரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த நிலையில், 27 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதனைக் கண்டித்து இந்து இயக்க பொறுப்பாளர்கள் சிறை செல்ல தயார் என கூறி சரண் அடைந்தனர்.
இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன்
பா.ஜ.க மாவட்டத் தலைவர் தயா சங்கர், பொதுச் செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து முன்னணி நிர்வாகிகள் பிரம்மநாயகம், வினோத், சுடலை சிவா, ராஜா செல்வம், பாஜக நிர்வாகிகள் ஆறுமுகம், கனேஷ் குமார், ஆதித்தன், பாபு, மாரியம்மாள், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரவி உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் இறங்காமல், காவல்துறை வேனில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.



