
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி, காவிரி குறித்த தனது இறுதித் தீர்ர்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு வரும் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், மத்திய அரசு மேலாண்மை வாரியம் தொடர்பில் குழப்பம் ஏற்படுத்தும் தகவல்களைக் கூறி வருகின்றது.
இதை அடுத்து தில்லி சென்ற தமிழக பொதுப் பணித்துறை செயலர் பிரபாகர், தொழில் நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், காவிரி வழக்கில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சேகர்நாப்தேவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால், 31ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என வழக்கறிஞர் சேகர்நாப்தே தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி குறித்த காலக்கெடு வரையில் காத்திருந்துவிட்டு, அவ்வாறு அமைக்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



