
நியூட்ரினோ திட்டத்துக்கு கலாம் ஆதரவு தெரிவித்து கட்டுரைகளை எழுதியிருந்த நிலையில், நியூட்ரினோவை அதனால்தான் கலாம் எதிர்த்தார் என்று அவர் பெயரை வாய்கூசாமல் வம்புக்கு இழுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
திமுக., தலைவர் கருணாநிதியின் சிறப்பம்சமே, உயிரிழந்த தலைவர்கள் யாரேனும் ஒருவரைச் சொல்லி, அவர் தன் கனவில் வந்தார் என்றும், தன்னை முன்னிலைப் படுத்தி, அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்றும் கூறுவதுதான். வரலாறு தெரியாதவர்கள் வேண்டுமானால், அந்தச் சொற்களை அதிசயித்துப் பார்ப்பார்களே தவிர, உண்மை அறிந்தவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள்.
அப்படி ஒரு இக்கட்டான நிலையில் இப்போது ஸ்டாலின் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

மதுரையில் இன்று காலை மதிமுக., சார்பில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நடைப்பயண நாயகன் வைகோ.,வின் தலைமையில் மதிமுக.,வினர் மதுரையில் இருந்து கம்பம் நோக்கி செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசினார் மு.க.ஸ்டாலின். அதுதான் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
நியூட்ரினோ திட்டத்துக்கு ஆதரவாக அப்துல் கலாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அப்துல் கலாம் நியூட்ரினோ திட்டம் ஆபத்தானது என்று கூறியிருப்பதாக திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 2015ல் தி இந்து நாளிதழில் நியுட்ரினோ ஏன் அவசியம் என்று அப்துல் கலாம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், நியுட்ரினோ ஆய்வு மூலம், வான சாஸ்திரம், விண் இயற்பியல், தகவல் தொடர்பு, மருத்துவம், உடல் உள்ளுறுப்புகளை படம் பிடித்தல் என்று பல துறைகளுக்கு உதவும் என்று, நியூட்ரினோ ஆய்வின் பயன்களை ஓர் அறிவியலாளர் என்ற முறையில், நுணுக்கங்களைக் குறிப்பிட்டு கலாம் எழுதியுள்ளார். மேலும் நியுட்ரினோ ஆய்வால் புற்று நோய் ஏற்படும் என்று தவறான தகவல் பரப்பப்படுவதாக அப்துல் கலாம் அப்போது அதை மறுத்து எழுதியுள்ளார்.
நியுட்ரினோக்கள் எந்த திடப்பொருளுடனும் மோதுவது இல்லை என்பதால் நிச்சயம் மனிதர்களுக்கு அவற்றால் புற்று நோய் ஏற்படாது. நியுட்ரினோக்களை புரிந்து கொண்டால் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும் கனிம வளங்கள், பெட்ரோலிய வளங்களைக் கண்டுபிடிக்கலாம் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வார்த்தைதான் நியூட்ரினோவுக்கு எதிராக ஒரு சில குழுக்கள் கிளம்புவதற்குக் காரணமாக அமைந்துள்ளதோ என்னவோ?!
ஒருகாலத்தில், நியூட்ரினோ ஆய்வில் இந்தியா முன்னோடியாக இருந்தது. கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1960-களில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை நிர்மாணித்திருந்தோம். அப்போது அதுதான் உலகிலேயே மிகவும் ஆழமான நியூட்ரினோ ஆய்வுக்கூடமாக இருந்தது. 1965-ல் வளிமண்டலத்தில் (Atmosphere) உள்ள நியூட்ரினோக்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. 1992-ல் தங்க அகழ்வு லாபகரமாக இல்லை என்பதால் சுரங்கம் மூடப்பட்டபோது, நியூட்ரினோ ஆய்வுக்கூடமும் சேர்த்தே மூடப்பட்டது. இதனால், மிகவும் புதிரான இந்தத் துகள் பற்றிய ஆய்வில் நமக்குக் கிடைத்த சாதகமான பலன்களை இழந்தோம். இப்போது தேனி அருகில் அமையவிருக்கும் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐ.என்.ஓ.) இழந்த பலன்களையும், இந்த ஆய்வில் நமக்குள்ள உலகத் தலைமையையும் மீட்டெடுக்க உதவும்… என்று அந்தக் கட்டுரையில் அப்துல் கலாம் எழுதியுள்ளார்.
உலகத் தலைமையை மீட்டெடுத்தல், கனிம வளங்களைப் பெறுதல் என்றெல்லாம் கலாம் குறிப்பிடுவதுதான் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கு சில குழுக்களுக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது என்பது, கலாம் கட்டுரையைப் படித்த பின்னர்தான் தோன்றுகிறது.
நியூட்ரினோ குறித்து கலாம், தி ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரை, இப்போதும் படிக்கக் கிடைக்கின்றது.



