இன்று இரவு அமெரிக்கா பயணமாக உள்ள ரஜினிகாந்த், அங்கு இரண்டு வாரங்கள் தங்க உள்ளார். அமெரிக்காவில் கட்சி தொடங்க தேவையான ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனை ரஜினியின் அரசியல் பயணத்துக்கு உதவும் என்று கருத்தப்படுகிறது.
ரஜினிகாந்த் இன்று அமெரிக்க செல்ல உள்ள நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவித்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறினார்.
தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த் கடந்த மார்ச் 5ம் தேதி சென்னை தனியார் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார்
காவிரி விவாகரத்தில் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வந்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக இருக்க முடியும் என்று ரஜினி டுவிட்டரில் தெரிவித்தார். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதற்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று ரஜினி கூறினார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தின் போது போலீஸ்காரரை ஒருவர் தாக்கிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரஜினி, ‘போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம். இதை கிள்ளி எறிய வேண்டும். காவலர்கள் மீது கை வைப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். இது பெரியளவில் சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில், உடல் பரிசோதனைக்காக இன்றிரவு அமெரிக்க பயணமாக உள்ளார். அமெரிக்க பயணம் முடிந்து திரும்பியதும் தனது கட்சி தொடங்குவது குறித்து அவர் அறிவிப்பாரா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.



