சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெயானந்த் ஆகியோரின் செயல்பாடுகள் தங்களை காயப்படுத்துவதாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தனது பேஸ்புக்கில் போட்டிருந்த பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெயானந்த் வெளியிட்ட அறிக்கையில், வெற்றிவேல் வேறு யாரோ சொல்லி இந்தப் பதிவை போட்டிருக்கிறார் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து, டிடிவி தினகரனை மறைமுகமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனால், டிடிவி தினகரன், திவாகரன் என பங்காளிகளுக்கு இடையே மோதல் வெளிப்படையாக வெடித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.இதனை பங்காளிச் சண்டை என்றும், இன்று அடித்துக் கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள் என்றும் நக்கல் அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் “இனி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதில்லை. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் ஏற்கமாட்டோம். எனவே, அம்மா அணி என்கிற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவோம். அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என தினகரன் நினைக்கிறார். கட்சி உறுப்பினர்களைக் கேட்காமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்” என திவாகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில், கும்பகோணம், சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்று திவாகரன் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை அவர் என் மீது காட்டுகிறார்” என பதிலளித்தார்.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திவாகரன், ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டணியில் இணைய பாஜக.,வுடன் தான் பேசியிருப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அப்போது, “டிடிவி தினகரன் தரப்பினர் எல்லா குற்றச்சாட்டுகளையும் சொல்வார்கள். ஒருவருடைய மதிப்புக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
ஓ.பன்னீர்செல்வம் மீது இப்படித்தான் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். ஓபிஎஸ் வெளியே வந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். அடுத்து எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்கள். அவரிடம் இவர்களது எண்ணம் பலிக்கவில்லை. இப்போது என் மீது பழி சுமத்துகின்றனர். என்னிடமும் அவர்களது எண்ணம் பலிக்காது. யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பதை காலம் காட்டும்.
தினகரனின் முதல்வர் ஆசையால்தான் அதிமுக.,வுக்கு இவ்வளவு கேடு. தினகரன் இல்லாதிருந்தால் அதிமுகவுக்கு இவ்வளவு பிரச்னையே வந்திருக்காது. சசிகலா சிறை செல்லும் போது தினகரன் முதல்வர் பதவி கேட்டார். ஆனால், சசிகலா கொடுக்கவில்லை. அதன்பின், அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவிக்கு பிச்சை எடுத்தார். சசிகலாவும் பிச்சை போட்டார். டிடிவி.,யால் சசிகலாவும் கெட்டுப் போய்விட்டார்.
123 எம்எல்ஏக்கள், 28 எம்.பி.க்கள் என அனைத்தும் சேர்ந்துதான் கட்சியை தினகரனிடம் கொடுத்தார் சசிகலா. இப்போது அவர் என்ன பாக்கி வைத்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என கட்சி ஆரம்பித்து போலி நாடகமாடிக் கொண்டிருக்கிறார்… இப்படி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் திவாகரன்.
மன்னார்குடி குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சண்டைகளால், இரு தரப்பினரும் செய்து வந்த அராஜகங்கள், ஊழல்கள், துரோகங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.