இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்,மதுரையில் மே 2-3 ஆகிய இரண்டு நாட்கள்,மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று (02.05.2018) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்களை உடனடியாக வெளியிடுக!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், இந்த ஆண்டு திடீரென வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திற்கு உள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. தேர்வு நடைபெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் எவை என்பது குறித்த விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாமலே உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு நீட் தேர்வை திணித்தது மட்டுமின்றி, நீட் தேர்வுக்கான மையங்களில் குளறுபடிகளையும் ஏற்படுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, மாற்றியமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை உடனடியாக அறிவிக்க வேண்டுமெனவும், வெளியூர்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்பினால், சிறப்புச் சலுகையாக ரயிலில் இடஒதுக்கீடு அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வழங்கிட வேண்டுமெனவும், இதற்கான உரிய முயற்சியை மாநில அரசு தேர்வு வாரியத்தோடு பேசி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.