அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி 28-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கனவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், கத்திரி வெயில் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை இருக்கும். அடுத்த 3 மாதத்துக்கு வழக்கத்தை விட 0.5 முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகம் பதிவாக வாய்ப்பு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து அனல்காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அனல் காற்று வீசுவதுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டத்தில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறும்.
பரவலாக தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 107 டிகிரி வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் கடல் காற்று புகுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது.
ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு நிலப்பரப்பில் வீசும் காற்று, கடல் காற்றை நிலப்பரப்புக்குள் புகாமல் தடுத்து விடும். இதனால் அனல் காற்று வீசும் என்றனர்.