
சமூக வலைதளத்தில் அவதூறாக ஒருக்கட்சி சார்ந்து விமர்சனம் பதிவிடும், அரசுப்பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.,6ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணிகளில், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ ஓட்டு சேகரிப்பு, விமர்சனங்கள் உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
இதை மீறி செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நிலையில், கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், கிழக்கு ராஜாப்பட்டியில், அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக, அமுதன் பணிபுரிந்து வருகிறார்.
இவர், தமிழக ஆசிரியர் கூட்டணியில், கரூர் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவரது பேஸ்புக்கில் தொடர்ந்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார். அதில், முதல்வர் பழனிசாமி, அவரது தாயை தரக்குறைவாக, தி.மு.க.,- எம்.பி., ராசா பேசியதை, ‘சங்கிகள் எடிட்’ என்று பதிவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி பிரசாரம் குறித்து, ‘தொகுதிக்கு என்ன பண்ணிருங்கீங்கன்னு சொந்த கட்சிக்காரரே கேக்கறாரு, அரவக்குறிச்சி வேட்பாளர், பா.ஜ., அண்ணாமலை பற்றி, எவனாவது ஐ.பி.எஸ்., வேலையை விட்டுட்டு இப்படி கோமாளித்தனம் பண்ணுவானா?’ என, பதிவிட்டுள்ளார்.
மேலும், வேட்பாளர் பட்டியல், தி.மு.க.,வில் நடக்கும் ஆச்சரியம்! என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இவர், போட்டோ மற்றும் வீடியோவுடன் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது ஆசிரியர் அமுதன், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்.
இப்படி ஒரு கட்சி சார்பாக பதிவுகளை வெளியிடும் இவர், எப்படி ஓட்டுச்சாவடியில் நடுநிலையுடன் செயல்பட முடியும். இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த, 2017ல், சமூக வலைதளங்களில் ஆபாசமாக விமர்சனம் செய்ததால், அமுதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி கூறுகையில்,”அந்த ஆசிரியரின், சமூக வலைதளத்தை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.