அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்ற ஆடியோ, தமிழகத்தையே பரபரப்பாக்கியது. இந் நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து பேராசிரியை நிர்மலாதேவி, காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்த பின் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர், ஆளுநர் நியமித்த சந்தானம் விசாரணைக் குழுவினரும் இவர்களை விசாரித்துவந்தனர். இந்த வழக்கு, இந்த மூவரின் கைதுக்குப் பிறகு எந்த ஒரு நகர்த்தலும் இல்லாமலே செல்கிறது. இந்த நிலையில், நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் 15நாட்கள் முடிந்த்தையடுத்து அவர் இன்று மதுரை மத்திய சிறைச்சாலையில் இருந்து விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி மேலும் கால அவகாசம் கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கப்படுகின்றன.



