கோவில்பட்டி: அதிமுக., அரசின் சீரிய திட்டங்களால் கல்வித் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திருமங்கலத்தில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர், தமிழகம் கல்வித் துறையில் முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிமுக., அரசின் சீரிய திட்டங்களால் நாட்டிலேயே தமிழகம் கல்வித் துறையில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.




