தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு ரஜினி, கமல், சூர்யா, பிரகாஷ்ராஜ், கார்த்தி ஆகிய நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன். துப்பாக்கிச்சூடு சம்பவம் உளவுத்துறை, தமிழக அரசின் தோல்வியை காட்டுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கமல் : தூத்துக்குடியில் இன்னும் பதற்றம் ஓயவில்லை. மக்களை மிரட்டுவது அரசுக்கு அழகல்ல. இது போன்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆட்சியில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகினால் அது அவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையாகவே இருக்கும்.இதை விட பெரிய தண்டனையை மக்களுக்கு அவர்களுக்கு கொடுப்பார்கள். அரசு தனது ஈகோவை விடுத்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
இத்தனை நாட்களும் அவர்கள் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அதுதான் நியாயமானது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தது போதாது. தூத்துக்குடியில் அமைதி ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
சூர்யா : மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆரம்பத்திலேயே பிரச்னையை அரசு தீர்க்க வேண்டும். போராட்டத்தில் வன்முறை கூடாது, போராடுவதே வன்முறை ஆகிவிடாது .மக்கள் தேவைகளை தீர்த்து வைக்கிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கார்த்தி : எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தன்னெழுச்சியாக திரண்ட மக்களைக் கொஞ்சமும் ஈவு இரக்கமற்று சுட்டுக் கொன்றிருப்பது நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. மண்ணுக்கு மக்களுக்குமான போராட்டத்தில் உயிர்விட்ட ஒவ்வொருவருக்கும் என் அஞ்சலியை செலுத்துகிறேன். சுற்றுச்சூழலை காக்க உயிர்விட்ட அத்தனை பேரையும் அவர்களுடைய தியாகத்தையும் நாளைய வரலாறு கல்வெட்டு கணக்காக நினைவில் வைத்திருக்கும்.
பிரகாஷ்ராஜ் : சொந்த மக்கள் போராடியபோது அவர்களை கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. போரட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா? ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது.



