தமிழக சட்டப்பேரவை திட்டமிட்டபடி இன்று கூடவுள்ள நிலையில், மே 29ம் தேதி முதல் ஜூலை 9 ம் தேதி வரை மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
கடந்த 24ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூடுவதற்கான தேதி குறித்து அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக வார இறுதி நாட்களை தவிர்த்து மே 29ம் தேதி முதல் ஜூன் 14 வரையும் இரண்டாம் கட்டமாக ஜூன் 25 முதல் ஜூலை 9 வரையும் மொத்தம் 23 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீன் 15 முதல் ஜூன் 24 வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் தினமும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு கேள்வி நேரம் நடைபெறும். அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, நீட் தேர்வில் மாணவர்கள் மீது கொடுக்கப்பட்ட கெடுபிடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளான இன்று, கேள்வி நேரத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 30ம் தேதி பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, 1ம் தேதி கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, 4ம் தேதி உள்ளாட்சித்துறை, 5ம் தேதி நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை 11ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை என மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
இந்நிலையில் மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அதிமுக அரசிடம் கேள்வி கேட்க தயாராக உள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



