ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் உருவாகி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை தூத்துக்குடியில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்தார் . அங்கு மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இது பெரிய சர்ச்சை ஆனது. இதுகுறித்து விளக்கம் அளித்த, பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்கள் நேரடியாக கேட்டு இருந்தால் உள்ளே அனுமதித்து இருப்பேன் என்று பேட்டியளித்தார். ஆனால் அதிமுகவின் சமூக வலைதள நிர்வாகி இதுகுறித்து மோசமான டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார்.
அதிமுக சமூக வலைதள நிர்வாகி ஹரி பிரபாகரன், ”துணை முதல்வர் சென்ற தூத்துக்குடி மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, பிஸ்கெட்டிற்காக குரைக்கும் நாய்களை கேட்டிற்கு வெளியேதான் கட்டி வைப்பார்கள். உள்ளே விட மாட்டார்கள்” என்று மோசமாக டுவிட் செய்திருந்தார்.
இதனால் அதிமுக சமூக வலைதள நிர்வாகி ஹரி பிரபாகரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



