துப்பாக்கிச் சூடு குறித்த திமுக ஒத்தி வைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
இதைத்தொடர்ந்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள்
வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்ட சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தி.மு.கவின் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்த தமிழக சபாநாயகர் தனபால், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தி.மு.கவினர் பேச அனுமதிக்கப்படுவர் என்றார்.
இந்நிலையில், தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலில் ஸ்டாலினை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்,.
அதற்கு சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் தான் முதலில் பேச அழைக்கப்படுவர் என்றார்.
இதை தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் முதலில் எதிர்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உள்ள விவகாரங்களை நேரமில்லா நேரத்தில் பேச முடியாது என்றார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவர அறிக்கையை தாக்கல் செய்தார்.



