கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தில் , முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே. பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து,தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த ஆலையை தமிழக அரசு சீல் வைத்துள்ளது. அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நிரந்தரமாக மூட தமிழக முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார். அவர் இதுவரை பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்பட வில்லை. இனியாவது அவர் அவ்வாறு செயல்பட வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில், முதல்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோருகிறார். திமுக ஆட்சியில் 13 முறை, துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. எனவே அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி மீது, ஏன் வழக்கு பதிவு செய்ய வில்லை. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்கனவே சட்ட போராட்டத்தின் வாயிலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக விவசாயிகளுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தார்கள். எனவே அந்த சட்ட போராட்டத்தின் படி தமிழக அரசு தொடர்ந்து போராடும். அந்த தீர்ப்பின் படி தண்ணீர் பெற்று தர, தொடர்ந்து சட்ட போராட்டங்களை இந்த அரசு முன்னெடுத்து செல்லும் என்று தெரிவித்து கொள்வதாக கூறினார்.



