மாநிலத்துக்குள் அனுப்பப்படும் சரக்குகளுக்கான இ-வே பில் நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வரைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து வணிகவரித் துறை அதிகாரிகள் இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலங்களுக்கு மத்தியிலும், மாநிலத்துக்கு உள்ளும் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு இ-வே பில் கட்டாயம்.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை அனுப்புவதற்கு இணையத்தில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்ப முடியாது என்ற இந்த வரைமுறை கடந்த ஏப்ரல் முதல் தேதி அமல்படுத்தப்பட்டது.
ஆரம்ப நிலையில் எதிர்ப்பு
ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்துக்கு வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரைமுறைகளில் திருத்தங்களைக் கொண்டு வரவும், நடைமுறைச் சிக்கல்களைக் களையவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலை பிற சில மாநிலங்களிலும் நிலவியதால் மாநிலங்களுக்கு வெளியில் செல்லும் சரக்குகளைத் தவிர்த்து, மாநிலத்துக்குள் அனுப்பும் சரக்குகளுக்கு படிப்படியாக இதைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நிர்ணயிக்கப்படும் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு கட்டாயமாக இ-வே பில் தேவையாகும்.
இ-வே பில் இல்லையெனில் சரக்கின் மதிப்புக்கு ஏற்ப வரி மற்றும் நூறு சதவீத அபராதம் விதிக்கப்படும் என வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



