இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அர்ஜூன் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் தேர்வு குறித்து விமரிசனங்களும் எழுந்துள்ளன. ஆஷிஷ் கபூர், கியாநேந்திர பாண்டே, ராகேஷ் பரிக் அடங்கிய தேர்வுக்குழு அர்ஜூனைத் தேர்வு செய்துள்ளது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த வருடம் 19 வயதைத் தாண்டுபவர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவான கட்டளைகளை விதித்துள்ளார். இதனால் அர்ஜூனை விடம் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வாகவில்லை. அவர்கள் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவார் டிராவிட். எனவே அர்ஜூனை விடவும் திறமைசாலிகளாக உள்ளவர்கள் தகுதி பெறவில்லை. அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலைக் கவனித்தால், 15 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர்களில் அர்ஜூன் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.
மற்றவர்கள் எல்லாம் சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளார்கள். ஆல்ரவுண்டர் அஜய் தேவ் கெளட் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் மிதவேகத்தில் பந்துவீசுபவர். அர்ஜூன் மட்டுமே அதிவேகப்பந்துவீச்சாளர். உனாவில் நடைபெற்ற யு-19 மண்டலங்களுக்கிடையிலான போட்டியில் ஓர் ஆட்டத்தில் 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். அவருடைய திறமையைப் பயன்படுத்திக்கொள்ள தேர்வுக்குழு விரும்பியுள்ளது. அதனால்தான் தேர்வாகியுள்ளார் என்று கூறியுள்ளார்.



