திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கஸ்தூரி கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துஆழ்வார்பேட்டையில் நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது கையில் கஸ்தூரியை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள் , துடைப்பத்தை கையில் ஏந்தியும் கோஷமிட்டனர்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கினர். அதாவது, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தரும் உத்தரவிட்டனர். இதனால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, “இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே. 18-ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!” எனக் குறிப்பிட்டு, இரு திருநங்கைகளின் போட்டோவையும் இணைத்திருந்தார்.
இது திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்ய, முதலில் அந்த போட்டோவை டுவிட்டரிலிருந்து நீக்கியவர், பின்னர் அந்த பதிவையே முழுவதுமாக நீக்கினார். அதோடு தனது பதிவிற்கு டுவிட்டரில் மன்னிப்பும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




