ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தூத்துக்குடியில் நடத்தக் காவல்துறை கெடுபிடி செய்வதால் இன்று சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாளாகப் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்த நிலையில் இப்போதும் தூத்துக்குடி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறது. இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 30-வது நாள் நினைவு அஞ்சலிக் கூட்டத்தை சென்னையில் நடத்த நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து குமரி மக்கள் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் 30-வது நாள் நினைவஞ்சலியை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால், தூத்துக்குடியில் பொது நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் மக்களைச் சுற்றி வளைத்தல், இரவு நேரத் தேடுதல் வேட்டை போன்ற மனிதநேயமற்ற கெடுபிடிகளால் குடும்பங்கள் நிம்மதியாக ஒன்றுசேரமுடியாத அசாதாரணச் சூழலையும் காவல்துறை உருவாக்கி வைத்துள்ளது. ஆதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும், தூத்துக்குடி சமூகத்தின் பெரியோர்கள் சிலரும் கேட்டுக்கொண்டதன்பேரில் அவசர ஏற்பாடாகச் சென்னையில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்கிறோம். தூத்துக்குடிப் படுகொலைகளை நியாயப்படுத்தாத அரசியல் கட்சிகள் இயக்கங்களுக்கு அழைப்பும் சமர்ப்பித்துள்ளோம்.
எனவே, தமிழ்ச் சொந்தங்கள் வந்து உணர்வெழுச்சியுடன் இணைந்திட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வேண்டுகிறோம். 30-ம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்குச் சென்னை சி.ஐ.டி. காலனி 2-வது முதன்மைச் சாலையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடக்கிறது. சென்னை வாழ் தூத்துக்குடி, நெல்லை, குமரி மக்கள் சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பதாகை முழக்கத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் வழிநடத்துகிறார். அதிர்ச்சியிலும், ஆழ்ந்த மனக்காயங்களிலும், தொடரும் காவல்துறை கெடுபிடிகளிலும் நொந்துபோயிருக்கிற தூத்துக்குடி மக்களுக்கு இந்நிகழ்வு பேராறுதல் தரும்” என்றார்.



