மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அங்கீகாரம் வழங்கும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, யாருக்கும் ஆட்சேபம் இருந்தால், அதை தெரிவிக்குமாறு, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து, கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டெல்லி சென்ற கமல்ஹாசன், தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவில் தமது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.



