தனியாருக்கு, நிறுவனங்களுக்கு சாதகமாக பாலை வாங்க ஆவின் மறுப்பதா? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை?
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரியமான பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்ய தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் மீது ஆவின் நிறுவனம் அவதூறு பரப்பி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
ஆவின் நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் 11,503 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அவற்றில் உறுப்பினர்களாக உள்ள 4,29,080 உற்பத்தியாளர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2012-13 ஆம் ஆண்டில் 24.36 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் 2013-14 ஆம் ஆண்டில் 23.22 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. எனினும், கடந்த அக்டோபர் மாதத்தில் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப் பட்டதால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அதிகரித்தது. ஆனாலும், தமிழகத்தில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்திருப்பதால் அதை உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யமுடியாத சூழல் நிலவுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு பாலை கூடுதலாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை அல்லது ஏற்றுமதி செய்வதே சிறந்த வணிக உத்தியாக இருக்கும். ஆனால், ஆவின் நிறுவனமோ உழவர்களின் வயிற்றில் அடிக்கிறது.
சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க ஆவின் மறுக்கிறது. சில இடங்களில் வழக்கமான அளவைவிட குறைவாகவே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சில தனியார் பால் விற்பனையாளர்களை தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினராக பதிவு செய்துள்ள ஆவின் நிறுவனம், அவர்களிடமிருந்து லிட்டர் ரூ.25 என்ற விலையில் மொத்தமாக கொள்முதல் செய்கிறது. பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடம் லிட்டர் ரூ.28 என்ற விலையில் பால் கொள்முதல் செய்வதைவிட மொத்தமாக ரூ.25- க்கு கொள்முதல் செய்வது அதிகாரிகளுக்கும், பால் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்களாக உள்ள ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் லாபமாக இருப்பதால் இந்த நடைமுறையை ஆவின் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வருகிறது.
பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யாமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் கூற வேண்டும் என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பால் இல்லை என்று கூறுகின்றனர். எருமைப் பால், பசும்பால் என வகை பிரித்து தான் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. இரு வகை பாலும் அவற்றுக்கென உள்ள தரத்தில் தான் இருக்கும். அந்தப் பாலைத் தான் இவ்வளவு காலமும் ஆவின் கொள்முதல் செய்து வந்தது. இப்போது தனியார் குறைந்த விலைக்கு பால் தருகிறார்கள் என்பதற்காக பாரம்பரிய பால் உற்பத்தியாளர்கள் மீது அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. சரக்குந்தில் எடுத்துச் செல்லப்படும் பாலில் 2000 லிட்டரை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ரசாயனத் தண்ணீர் கலப்படம் செய்து தரப்பட்ட பாலையெல்லாம் தரமான பால் என்று சான்றளித்த ஆவின் நிறுவனம், இயற்கையாக பசு தரும் பாலை தரமில்லாதது என்று ஒதுக்குவது விந்தையிலும் விந்தையாகத் தான் இருக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் இச்செயலைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாலை தரையில் கொட்டி உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆவின் நிறுவனம் செய்யும் இந்த துரோகத்தால் இருவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது, கொள்முதல் செய்யப்படாத பாலை உள்ளூரில் உள்ள தனியார் பால் விற்பனையாளர்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டியதாகிறது. இவ்வாறு வாங்கும் பாலை அவர்கள் கூடுதல் லாபம் வைத்து ஆவினிடம் விற்பனை செய்கின்றனர். இரண்டாவது, ஆவின் நிறுவனம் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு தாராளமாக விற்பனை செய்வதால் ஆவின் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைத்தன. இதேநிலை நீடித்தால் தனியார் பால் விலை மேலும் சரிந்திருக்கும். ஆனால், ஆவின் கூடுதலாக பாலை கொள்முதல் செய்ய மறுப்பதால் அதன் விற்பனை குறைந்து தனியாரின் விற்பனை அதிகரிக்கும். இதனால் அவற்றின் விலையும் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் பால் கொள்முதலை ஆவின் குறைக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது.
தனியாருக்கு சாதகம் செய்வதற்காக பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களுக்கு துரோகம் செய்வது மன்னிக்க முடியாததாகும். இந்த போக்கை கைவிட்டு பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடமிருந்து முழு அளவில் பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனம் ஆகிய இரு தரப்புமே பயனடைய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.