
ஐ.பி.எல் 2025 – குஜராத் vs மும்பை – அகமதாபாத் – 29.03.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் அணி (196/8, சாய் சுதர்ஷன் 63, ஷுப்மன் கில் 38, ஜாச் பட்லர் 39, ரூதர்ஃபோர்ட் 18, ஹார்திக் பாண்ட்யா 2/29, ட்ரண்ட் போல்ட், தீபக் சாஹர், முஜீபுர் ரஹமான், சத்யநாராயண ராஜு தலா ஒரு விக்கட்) மும்பைய் இந்தியன்ஸ் அணியை (160/6, சூர்யகுமார் யாதவ் 48, திலக் வர்மா 39, நமன் திர் 18, மிட்சல் சாண்ட்னர் 18, சிராஜ் 2/34, பிரசித் கிருஷ்ணா 2/18, ரபாடா 1/42, சார் கிஷோர் 1/37) 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (41 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் ஷுப்மன் கில் (27 பந்துகளில் 38, 4 ஃபோர், 1 சிக்சர்) அதற்கடுத்து வந்த ஜாஸ் பட்லர் (24 பந்துகளில் 39 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
சாய் சுதர்ஷன் 18ஆவது ஓவர் வரை விளையாடினார். ஷுப்மன் கில் 9ஆவது ஓவரிலும் ஜாஸ் பட்லர் 14ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த தமிழகத்தின் ஷாருக் கான் (9 ரன்), ரூதர்ஃபோர்டு (18 ரன்), ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்), ரஷீத் கான் (6 ரன்), சாய் கிஷோர் (1 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது.
197 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (4 பந்துகளில் 8 ரன்), அவரோடு களமிறங்கிய ரியன் ரிக்கிள்டன் (6 ரன்) என சொற்ப ரன் களில் ஆட்டமிழந்தனர்.
அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 48 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), திலக் வர்மா (36 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர்.
ஆனால் அதன் பின்னர் ராபின் மின்ஸ் (3 ரன்), ஹிருதிக் பாண்ட்யா (11 ரன்), நமன் திர் (ஆட்டமிழக்காமல் 18 ரன்), மிட்சல் சாண்ட்னர் (ஆட்டமிழக்காமல் 18 ரன்) ஆகியோர் சுமாராக ஆடியும் 20 ஓவர்களில் மும்பை அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 160 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்த ஐபிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக மும்பை அணி தோல்வியைச் சந்தித்தது.
பேட்டிங் பவுலிங் இரண்டிலும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் மும்பை அணி தடுமாறுகிறது. ரோஹித் ஷர்மா ஃபார்மில் இல்லை. பும்ரா இல்லாத குறை பந்துவீச்சில் தெரிகிறது.
குஜராத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.





