சரித்திர நாவல் துறையில் தடம்பதித்த பிரபல எழுத்தாளர் அய்க்கண் (85) ஏப்ரல் 11 சனிக்கிழமை இரவு காலமானார். முறையாகத் தமிழ் கற்றவர். திருப்பத்தூர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
வல்லிக்கண்ணன், நா.பா. ஆகியோரைப் போல மிக அழகான கையெழுத்தில் கடிதங்கள் எழுதுபவர். மிகச் சிறந்த பண்பாளர்.
சென்ற ஆண்டு, கோவிலூர் மடத்திற்கு நான் சொற்பொழிவுக்காகச் சென்ற தருணத்தில்தான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன் என்று ஞாபகம். கோவிலூர் மடத்தின் தற்போதைய மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆழங்கால்படத் தமிழ் கற்றவர். அவரும் நானும் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அய்க்கண்ணுமாக பழைய இலக்கியங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
`சுவாமி விவேகானந்தரும் பாரதியாரும்` என்ற கண்ணோட்டத்தில் தாம் எழுதும் மாபெரும் நூலுக்கான ஆய்வுக் குறிப்புகளைத் தேடி கோவிலூர் மடத்து நூலகத்தில் உள்ள நூல்களைப் பார்வையிடும் பொருட்டு அன்று அங்கு சுவாமி கமலாத்மானந்தர் (தலைவர், மதுரை ராமகிருஷ்ண மடம்) வந்திருந்தார். பிறகென்ன, சபை களைகட்டக் கேட்பானேன்?
மடத்தின் பதிப்புப் பணிகள் பற்றி ஏற்கெனவே முல்லை முத்தையாவின் புதல்வர் மு. பழனி மூலம் நான் அறிந்திருந்தேன். எனினும் அவற்றையெல்லாம் மீண்டும் எனக்கு விளக்கிச் சொன்னார் அய்க்கண்.
பின்னர் மாலை நிகழ்ந்த என் சொற்பொழிவையும் இறுதிவரை இருந்து கேட்டார். போகும்போது என்னிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றார். இப்போது சொல்லாமலே விடைபெற்றுவிட்டார்.
காரைக்குடி திரு நாராயணன் மூலமாக இந்த ஆண்டு காரைக்குடி கம்பன் விழாவுக்கு நான் பேச அழைக்கப் பட்டிருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக விழா ஒத்தி வைக்கப்பட்டது.
ஒரு வாரம் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அய்க்கண். `உங்களை மறுபடி சந்திக்கும் மகிழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு விட்டதே` என்றார். இனி அவரை மறுபடி சந்திப்பதென்பது நிரந்தரமாக இல்லாமல் ஆகிவிட்டது…..
*கடந்த நான்கைந்து நாட்களாகவே சிறுநீரகம் தொடர்பாக ஒரு சிறிய உபாதை இருந்தது அவருக்கு. உயிர்போகும் அளவு பெரிய பிரச்னை அல்ல. அதன்பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நன்கு குணமானார்.
வெள்ளிக்கிழமை அவர் மனைவியின் நினைவு தினம் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது. அதற்காக அவரது இரு புதல்விகளும் மாப்பிள்ளைகளும் வந்திருந்தனர். (தன் மனைவி பெயரில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் `அருளரசி வசந்தா நினைவுச் சிறுகதைப் போட்டி` நடத்திப் பரிசுகள் வழங்கி வந்தார் அய்க்கண்.)
அய்க்கண் மருத்துவமனையில் தற்காலிகமாக விடைபெற்று இல்லம் வந்து மனைவியின் நினைவுச் சடங்கில் கலந்துகொண்டார். தன் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதித்தார். பின் தானே மீண்டும் மருத்துவமனை சென்றார்.
சனிக்கிழமை மதியம் தொடங்கி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. திடீரென் இதய அதிர்ச்சி (ஹார்ட் அட்டாக்) ஏற்பட்டது. பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அய்க்கண் அவர்களின் உயிர் பிரிந்தது. தாம் எழுதிய நூல்களை தமிழின் செல்வமாக உலகில் விட்டுவிட்டு அவர் மறைந்துபோனார்….
*உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்தவர். தமிழக அரசின் அண்ணா விருது பெற்றவர். திருப்பத்தூர் ஆறுமுகம் சீதையம்மாள் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சிறுகதை, நாவல், நாடகம் என நிறைய எழுதியவர். சரித்திர நாவல் துறையில் தம் அழகிய இலக்கணத் தமிழால் தடம் பதித்தவர். `இளவெயினி, நெல்லிக்கனி, சிவகங்கைச் சீமை, அதியமான் காதலி, இளவரசியின் சபதம்` உள்ளிட்ட அவரது சரித்திர நாவல்கள் குறிப்பிடத் தக்கவை.
`அவனுக்காக மழை பெய்கிறது, விடிவெள்ளி, நீயும் நானும் வேறல்ல, என் மகன்…` போன்ற அவரது சமூகப் படைப்புக்களும் முக்கியமானவையே.
ர.சு. நல்லபெருமாளின் நூல்களை ஆராய்ந்து இலக்கியச் சிந்தனை அமைப்புக்காக `கல்லுக்குள் சிற்பங்கள்` என்ற சிறந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூல் இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.
அன்று தமிழருவி மணியன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகிய தமிழின் சிறந்த பேச்சாளர்கள் பேசினார்கள். ர.சு. நல்லபெருமாள் குறித்து அய்க்கண் கருத்தாழத்தோடு மிகச் சிறப்பாக உரையாற்றினார். தன் கணவர் பற்றி அய்க்கண் எழுதிய நூலின் முதல் பிரதியை ர.சு. நல்லபெருமாளின் மனைவி பெற்றுக் கொண்டார்.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். `ஏதாவது ஒரு கருத்து, வாசகர்களுக்கான ஒரு செய்தி இல்லாமல் நான் எதையும் எழுதியதில்லை` என்பார் எப்போதும் சமூகப் பொறுப்போடு எழுதும் அய்க்கண்.
`இரண்டாவது ஆகஸ்ட் 15` என்ற இவர் நாவல், மகாத்மா காந்தியின் கிராமப்புற வளர்ச்சி என்ற கருத்தோட்டத்தை மையமாகக் கொண்டது. இந்த நாவலுக்கு இலக்கிய பீடம் இதழின் பரிசு கிடைத்தது.
சாகித்ய அகாதமி தமிழில் வெளியான சிறந்த முப்பது சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டபோது அந்தத் தொகுப்பில் இவர் கதையும் இடம்பெற்றது. பாரிஸ் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். இவரது சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக வந்துள்ளன. பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
அமுதசுரபி குறுநாவல் போட்டி, தினமணிகதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கி சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றவர். அகில இந்திய வானொலி நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்.
முதல் தரமான இந்த எழுத்தாளர் பெற்ற முதல் பரிசுகளின் எண்ணிக்கை இன்னும் பல. இவரது அனைத்துச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு நான்கு தொகுதிகளாக வந்துள்ளன.
நா.பா.வின் நெருங்கிய நண்பர். நான் தினமணிகதிரில் பணிபுரிந்த காலத்தில், கதிரில் நிறையச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நான் கலைமாமணி விருது வாங்கிய அதே ஆண்டு என்னிலும் பல ஆண்டுகள் மூத்தவரான அவருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
எடப்பாடியார் கையால் விருது வாங்கிக் கொண்டு அவர் மேடையை விட்ட இறங்கியபோது, `உங்களுக்கு இவ்வளவு தாமதமாகக் கலைமாமணி விருது வருகிறதே?` என்றேன். `அதனால் என்ன? இவ்வளவு தாமதமாகவேனும் வந்ததல்லவா?` என நகைத்தார்.
எதையும் தேடிச் செல்லாமல் வந்த பெருமைகளில் நிறைவடைபவர். சுயமரியாதை கொண்டவர். எதன்பொருட்டும் யார் பொருட்டும் தன்னிலை தாழாதவர்.
இரண்டு புதல்விகள். இரண்டு மாப்பிள்ளைகள். அவர்களின் குழந்தைகள். எல்லோரும் கடும் துயரில் ஆழ்ந்திருக் கிறார்கள். காலம் தான் அவர்களுக்கு ஆறுதல் தரவேண்டும்.
முறையாக மரபுத் தமிழ் கற்று, தற்கால இலக்கியத்திலும் தடம் பதித்த டாக்டர் மு.வ., தீபம் நா. பார்த்தசாரதி போன்றோர் வரிசையில் ஒளிவீசிய ஓர் இலக்கிய நட்சத்திரம் உதிர்ந்து விட்டது.
அய்க்கண்ணுக்கு என்னையும் சேர்த்து ஏராளமான ரசிகர்கள். சாதாரண காலமாக இருந்தால் எண்ணற்றோர் அவரது இறப்புக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் இல்லத்தில் கூடியிருப்பார்கள்.
ஆனால் இது கொரோனா காலம். கூட்டம் கூடுவதில் தடையுண்டு. அரசின் ஆணையைக் கட்டாயம் நாம் அனுசரிக்க வேண்டும். எனவே அவரது ரசிகர்கள் அவரவர் இல்லத்திலேயே அவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திப்போம்.
அய்க்கண் அவர்களின் இறுதிச் சடங்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபம் அருகே கைலாசநாதர் மூன்றாம் தெருவில் ஞாயிறு பிற்பகல் நடைபெறுகிறது. இடத்தைச் சொன்ன காரணம் வெறும் தகவலுக்காகவும் அந்த நேரத்தில் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்வதற்காகவும் மட்டுமே.
அய்க்கண் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு துயர் விசாரிப்பதற்கான தொலைபேசி எண்: 89034 33292.
- திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)