ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏ.டி.எஸ்.வகை கொசுக்கள் உற்பத்தியாக சாதகமாக வும் உள்ளது. சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
தமிழக முதல்வர் வரும் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு வலுச்சேர்க்கும் விதமாக, மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயல்படும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் ஜூலை 15 முதல் முதற்கட்டமாக ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். அவர்கள் மீண்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறியப்படும்.
ஒவ்வொரு முறையும் ரூ.1000க்கு குறையாமல் அபராதம் விதிப்பதுடன் ஒத்துழைக்க மறுக்கும் வணிகர்களது வணிக உரிமத்தை ரத்து செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



