சென்னை: பால் உற்பத்தியாளர்களிடம் வாங்காமல் அவர்களை தனியாரிடம் பாலை விற்பதற்கு கட்டாயத்தை ஏற்படுத்தி, தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி, ஆவினில் மறைமுக கொள்ளை நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் கிடைக்க உதவிக் கரம் நீட்ட அரசு தவறுமேயானால், அதனைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: “தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இது தவிர அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் விற்பனைக்காகப் பால் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஆவின் நிர்வாகம், பால் கொள்முதலில் ஏற்கனவே செய்து கொண்டிருந்த அளவை விடத் தற்போது சுமார் 15 சதவிகிதம் குறைத்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 25.12 லிட்டர் பாலை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறதாம். இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுவதுமாக விற்க முடியாமலும், பாதுகாத்திட வழி இல்லாமலும் நட்டத்தை அடைகிறார்கள். ஆவின் நிர்வாகத்தில் இதுபற்றி ரகசியமாக விசாரித்த போது, தற்போதைய கோடை காலத்தில் பாலைச் சேமித்து வைக்க செலவு அதிகமாகும் என்பதால், அதனால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, பால் கொள்முதலைக் குறைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அதன்படி பால் கொள்முதல் செய்வதைக் குறைத்திருப்பதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, பால் உற்பத்தியாளர்கள் சுமார் நான்கு இலட்சம் பேர் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை விற்பனை செய்கின்ற நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்தும், அதனை முழுமையாக விற்பனை செய்ய வேறுவழியின்றி பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க மறுக்கின்ற ஆவின் நிர்வாகம், சில தனியார் பால் விற்பனையாளர்களைத் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டு, அவர்களிடமிருந்து லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் விலை கொடுத்து வாங்குகின்றது. அதன் மூலம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், நிர்வாகத்திலே இருப்பவர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாலின் தரத்தைப் பற்றியும் வேண்டுமென்றே குறை கூறி ஆவின் நிர்வாகம் உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக்கொள் முதல் செய்ய மறுப்பதைக் கண்டித்து அவர்கள் ஆங்காங்கு போராட்டமும் நடத்தி வருகிறார்கள். ஆவின் நிர்வாகம் பாலை வாங்க மறுப்பதால், உற்பத்தியாளர்கள் அதனைக் குறைந்த விலைக்கு சில தனியார்களிடம் விற்றுத் தீர வேண்டிய கொடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைந்த விலைக்கு வாங்கும் தனியார்களே, மீண்டும் ஆவின் நிர்வாகத்திற்கே இரு தரப்பினரும் செய்து கொண்டிருக்கும் மறைமுக ஒப்பந்தத்தின்படி கூடுதல் விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆவின் நிர்வாகத்தின் இத்தகைய அட்டூழியச் செயல்களைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன அறிக்கைகள் வந்துள்ளன. எனவே ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகின்ற இந்த அரசு, மற்றப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைப்பதைப் போல பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருதக்கூடாது. உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களின் அவலத்தை அகற்றுவதற்கு உதவிக் கரம் நீட்டத் தவறுமேயானால், அதனைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் கிடைத்திடவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பால் கொள்ளை போகும் கொடுமையைத் தடுத்திடவும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அளவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த ஆட்சியினருக்கு முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அங்கே வாங்கி இங்கே விற்று மறைமுக கொள்ளை; முதல்வர் தலையிடாவிடில் போராட்டம்: ஆவின் குறித்து கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari