கடந்த 2005-06 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 525 நீர்ப்பாசன குளங்களில் முழுமையாக நீரை தேக்க முடியாமல், ஆக்கிரமிப்புகள் சூழ்ந்திருக்கும் நிலை சுட்டிக்காட்டப்பட்டதாக இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள மொத்த ஏரிகளில் 40 சதவிகிதம் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு அறிக்கையில் 40 சதவிகிதத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் 45 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 2016-ல் ஆக்கிரமிப்பு அளவு 69 சதவீதமாக உயர்ந்துள்ள அதிர்ச்சி புள்ளி விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007-ல் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஆயிரத்து 554 குளங்களில் 551 குளங்களை மட்டுமே நீர்வள ஆதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. மார்ச் 2016 வரை 36 ஆயிரத்து 814 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கண்டறியப்பட்டு, 30 சதவீத கட்டடங்கள் மட்டுமே அகற்றப்பட்டு உள்ளன.
381 குளங்கள் முழுமையான கொள்ளளவுக்கு நிரம்ப முடியாமல் ஆக்கிரமிப்புகள் பெரும் தடையாக நீடித்து வருகிறது என்ற சோகப் பதிவும் அறிக்கையில் உள்ளது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. வலுவான சட்டங்கள், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டும் 2013 – 14ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையே எடுக்காதது 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்க்கான ஒரு காரணமாக அமைந்தது என மத்திய கணக்குத் தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.



