சேலம்-சென்னை எட்டுவழி பசுமை சாலைத் திட்டம் குறித்து, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வரும் இன்றும் நாளையும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்க உள்ளார்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலர் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் வெளியிட்ட செய்தியில், சேலத்திலிருந்து சென்னைக்கு 8 வழி பசுமைச் சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இத் திட்டம், தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிய தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில நாள்களுக்கு முன் தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சில கிராமங்களுக்கு செல்ல முயற்சித்தார். அப்போது, காவல் துறை சார்பில், விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, விவசாயிகளிடம் கருத்து கேட்க, உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு அரூர் அருகேயுள்ள முத்தானூர் மற்றும் நாளி காலை 10.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டி ஆகிய கிராமங்களில் அன்புமணி ராமதாஸ், விவசாயிகளை சந்தித்து, 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்க உள்ளார்.



