மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வருமான வரிச்சோதனையில் கைப்பற்ற பணம் மற்றும் தங்கக் கட்டிகள் என்ன வாகின்றன என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோதனைக்குப் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதை விளக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இல்லையா என வினவிய கமல்ஹாசன், சோதனைகள் வெறும் கண் துடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் எழும் நிலை வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை வரவேற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பதிலடி கொடுத்து அவர் பேசுகையில்,
“மக்களுடன் முதலில் பேச வேண்டும். இதை மக்கள் கேட்டிருந்தார்களேயானால், எங்களுக்கு உடனே ஆவண செய்யுங்கள், இந்த 8 வழிச் சாலை இல்லாமல் எங்கள் வாழ்க்கை தடம் புரண்டுவிடும் என்று, யாராவது சொன்னார்களா?, அல்லது சேலத்திற்கு போவதற்கு, இது ஒரு வழியேதான் உள்ளதா? என்பதையும் யோசிக்க வேண்டும். வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. அவைகளை இவற்றை விட குறைந்த செலவில், விரைந்து முடிக்கும் வழிகளும் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். அதையெல்லாம் கேட்காமல், இப்படித்தான், இதுதான் என மக்களை வற்புறுத்த முடியாது” என்றார்.
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வு என்றும், இந்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து வழங்க வேண்டும் என்றார்.



