ஒரு மாத காலமாக நடைபெற்றுவரும் மாங்கனித் திருவிழா இன்று விடையாற்றி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரை மையப்படுத்தி நடத்தப்படும் மாங்கனித் திருவிழா, கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி பரமதத்தர் என்கிற மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 22-ஆம் தேதி அம்மையார் மணிமண்டபத்தில் புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையார் – பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
23-ஆம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தர்களை நோக்கி மாங்கனி இறைக்கப்பட்டது. இரவு பிச்சாண்டவருக்கு அம்மையார் அமுதுபடையல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்ததுடன் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
மாங்கனித் திருவிழாவுக்கான விடையாற்றி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் அம்மையார் மணிமண்டபத்தில் ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சி, புத்தகம் வெளியீடு, இன்னிசை நிகழ்ச்சி, சொற்பொழிவு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அம்மையார் கோயில் வாயிலில் பாரதியார் சாலையில் இருபுறமும் மாங்கனித் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று விடையாற்றி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது. இதனுடன் ஒரு மாத கால மாங்கனித் திருவிழா நிறைவுக்கு வருகிறது. இன்று இரவுடன் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட கடைகளும் மூடப்படுகின்றன.



