இலங்கை-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கையிடம் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த தென்ஆப்பிரிக்க அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ள இலங்கை அணி அதே வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் வெளிப்படுத்தும் முனைப்புடன் உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு இலங்கை கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். அதே சமயம் மறுபடியும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தொடரில் பந்து வீசுவதில்லை என்று அவர் முடிவு வெடுத்துள்ளார். உள்ளூரில் ஆடுவது இலங்கை அணிக்கு சாதகமான அம்சமாகும்.
கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிய போது 5 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. அதில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 10 ஒரு நாள் போட்டிகளில் 9-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டிருக்கிறது.



