தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சிறுபான்மையின மாணவர்கள் பங்கேற்பது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பில்,
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 31-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில், தமிழகத்தைப் பூர்வீகமாககக் கொண்டு மலையாளம் அல்லது தெலுங்கை தாய் மொழியாக படித்து, 2018 -19 -ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே சிறுபான்மையின கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
நீட் தரவரிசை 2,520 முதல் 18,915 வரை பெற்ற சிறுபான்மையின மாணவர்களைத் தவிர வேறு மாணவர்கள் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதிய அட்டவணையின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தரவரிசை 1 முதல் 2,519 வரை பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை காலையும், பிற்பகல் 2 மணிக்கு வேலூர் கிறிஸ்தவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.



