சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில், 12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில், ஆந்திர காவல்துறை மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 20 பேரை ஆந்திர மாநிலக் காவல்துறையின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மனித நேயமின்றி, கொலைவெறியுடன் ஆந்திரக் காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.இக் கொடியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் நீண்டநாட்களாக நடப்பதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. செம்மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தருவது தான் காவல்துறையின் பணி ஆகும். அதை விடுத்து, அப்பாவி தொழிலாளர்களை காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலைக் குற்றமாகும். சுட்டுக் கொல்லப்பட்ட 12 தமிழர்களும் ஆந்திராவில் கல் உடைக்கும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிக்காக ஆள் தேவை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர். தினமும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிகளை விசாரணை கூட நடத்தாமல் காவல்துறை சுட்டுக் கொன்றிருப்பதும், தற்காப்புக்காகத் தான் அவர்களைச் சுட்டுக்கொன்றதாக பொய்க் காரணம் கூறுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. செம்மரக் கடத்தலைக் காரணம் காட்டி தமிழகத்தைச் சேர்ந்த 3,000&க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேரூந்து ஒன்றும் மரம் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் செயல்படாத அரசு ஆந்திர அரசைக் கண்டிக்காதது தான் தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இக்கொலைகளுக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். 12 தமிழர்கள் உட்பட 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையின் துணைத் தலைவர் காந்தா ராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தாக்குதல் குறித்து பணியிலுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதுடன், கொல்லப்பட்ட 20 தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ஆந்திர அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.